சிறுமிகள் துஸ்பிரயோகம்!! இருவேறு இடங்களில் நடந்த சம்பவம்

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிறு புடவை கடை ஒன்றை நடத்தி வருகின்ற நபர் ஒருவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இதனை அவதானித்த பொது மக்கள் குறித்த நபரை பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளதோடு அவரது புடவைக்கடையினையும் தீயிட்டு எரித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

குறித்த பகுதியில் சிறு புடவை கடை நடாத்தி வருகின்ற நபர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அத்துமீறி தனி நபர் ஒருவரின் காணியை பிடித்து வியாபாரம் நிலையம் அமைத்து நடாத்தி வருகின்றார் என்றும் எனவே இது தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளரினால், கடந்த 2017 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கும் 2019 ஆம் ஆண்டு பிரதேச சபையின் தவிசாளருக்கும் குறித்த நபர் சட்டவிரோதமாக கடை நடாத்தி வருகின்றார் எனவே அவரின் வியாபார அனுமதி பத்திரத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அக் கடிதத்திற்கு பிரதேச சபையினால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த நபர் 11 வயது சிறுமியை அச்சுறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதனை பலரிடம் கூறிய போது எவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவரது நடவடிக்கையினை இரகசியமாக வீடியோ எடுத்த பிறிதொரு நபர் அதனை ஆதாரமாக பொலிஸாரிடம் கொடுத்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதோடு, ஆத்திரமடைந்த பொது மக்கள் அவரது கடையினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்து அவரை ஒரு பிள்ளையின் தாயாராக்கிய குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.

2011ஆம் ஆண்டு முல்லைத்தீவு ஒட்டறுத்தகுளத்தில் 16 வயதுக்கு குறைவான சிறுமியின் உடல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து அவரது தாயார் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தினார். அதன்போது சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்தது.

அதனையடுத்து சிறுமி சட்ட மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். இதன்போது அயல் வீட்டில் வசிக்கும் குடும்பத்தலைவர் சிறுமியை வன்புணர்ந்துள்ளார் என்பது தெரியவந்தது.

சம்பவத்தையடுத்து மல்லாவி பொலிஸ் நிலையத்தில் சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார். சிறுமியின் வாக்குமூலத்தில் அடிப்படையில் அயல் வீட்டில் வசிக்கும் சேர்ந்த நாகமுத்து பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிரான சுருக்கமுறையற்ற விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வழக்கு சட்ட மா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டது.

2010ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்கும் 2011ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் சிறுமியை எதிரி மூன்று தடவைகள் வன்புணர்ந்தார் எனக் குறிப்பிட்டு 3 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியம், பொலிஸாரின் சாட்சியம் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரியின் நிபுணத்துவ சாட்சியம் என்பன பெறப்பட்ட நிலையில் விசாரணைகள் நிறைவடைந்தன.

இந்த வழக்கின் தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

“சிறுமியை 3 தடவைகள் வன்புணர்ந்ததாக எதிரிக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் சாட்சியத்தில் எதிரி ஒரு வருட காலத்துக்குள் 3 தடவைகள் வன்புணர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட சிறுமி தனது சாட்சியத்தில் ஒரு தடவைதான் வன்புணரப்பட்டதாக சாட்சியமளித்துள்ளார்.

எனவே பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியம், நிபுணத்துவ சாட்சியங்களின் அடிப்படையில் எதிரி முதலாவது குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளியாகக் கண்டு தீர்ப்பளிக்கிறது.

இரண்டாம், மூன்றாம் குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாததால் எதிரி அவற்றிலிருந்து விடுவிக்கப்படுகின்றார்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.

“எதிரியை குற்றவாளியாக இனங்கண்டுள்ள மன்று, அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறது.

அத்துடன் குற்றவாளி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறினால் 18 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

மேலும் குற்றவாளி 10 ஆயிரம் ரூபா தண்டப் பணத்தைச் செலுத்த வேண்டும். செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனைத் தீர்ப்பளித்தார்.

கிளிநொச்சியில் கோர விபத்து!! ஒருவர் பலி நால்வர் படுகாயம்

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக எமது முத்தமிழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்தில் வானில் பயணித்த ஐவர் காயமடைந்த அதேவேளை அதில் மூவர் படுகாயங்களிற்குள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்களில் யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியை சேர்ந்த கதிர்பிள்ளை இரத்தினம் என்பவர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏ9 வீதியில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156ம் கட்டை பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து பயணித்த வான் மீது கிளிநொச்சி நோக்கி எதிர் திசையில்  பயணித்த டிப்பர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர்களில் 30 வயது குடும்ப பெண் மற்றும் அவரது ஒன்றரை வயது குழந்தையும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிப்பர் வாகனத்தின் பிரேக் தடுப்பு செயலிழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை விபத்தில் சிக்கிய வான் மூன்றுமுறை தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கும் மக்கள் வீதியின் ஓரத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்பட்டுள்ள வடிகான் ஆபத்தானதாக அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போலிசார் முன்னெடுத்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.