Take a fresh look at your lifestyle.

தவறவிட்ட தமிழகம்; தட்டி கொடுத்த டெல்லி: இந்தியாவின் நிகரற்ற விருது பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ்.

தலைசிறந்த ஆட்சிப்பணியாளருக்கான விருதைப் பெற்று மீண்டும் ஒருமுறை தமிழகத்தை தலைநிமிரச் செய்துள்ளார் நேர்மையின் நாயகன் சகாயம் ஐ.ஏ.எஸ்.

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்திய நேர்மை நாயகன், தாமிரபரணியின் தண்ணீரை உறிஞ்சிய பன்னாட்டு குளிர்பான நிறுவனத்தை இழுத்து மூடியவர், மதுரை மாவட்டத்தில் 2011 சட்டமன்ற தேர்தலை நேர்மையாக நடைபெற செய்தவர், தாது மணல், கிரானைட் கொள்ளையில் ஒரு லட்சம் கோடி ஊழலை வெளிக்கொண்டு வந்தவர், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபத்தில் இயக்கியவர், தற்கால இளைஞர்களின் நாயகன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆம், அவர்தான் சகாயம் ஐ.ஏ.எஸ். ‘ஜி பைல்ஸ்’ நிறுவனத்தின் தலைசிறந்த ஆட்சிப்பணியாளருக்கான விருதைப் பெற்று மீண்டும் ஒருமுறை தமிழகத்தை தலைநிமிரச் செய்துள்ளார்

Loading...

‘ஜி பைல்ஸ்’ (G FILES) என்கிற EMagazine (பத்திரிகை) நிறுவனம் ஆட்சிப்பணி தேர்வர்களுக்கான வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த ஆட்சிப்பணியாளர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கான இந்திய ஆட்சிப்பணி துறையில் (IAS, IPS, IFS, etc…) பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கிய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைப்பெற்றது.

அந்த விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளுக்கு சிறந்த ஆட்சிப்பணியாளருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தை சேர்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு தாதுமணல் மற்றும் கிரானைட் கொள்ளை கும்பலுக்கு எதிராக தைரியமாக போராடி ஒரு லட்சம் கோடி ஊழலை வெளிக்கொண்டு வந்ததற்காகவும், தேர்தலை நேர்மையுடன் நடத்தி முடித்ததற்காகவும் சிறந்த ஆட்சிப்பணியாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Loading...

தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளிலும் சிறப்பாக நேர்மையுடனும், துணிவுடனும் பணியாற்றி கொள்ளையர்களையும், கொள்கை இல்லாதவர்களையும் கொலைநடுங்க வைத்த திறைமைவாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நேர்மையுடன் செயல்பட்ட ஒரே காரணத்திற்காக 24 முறை பணியிடமாற்றம் செய்து அலைகழித்த தமிழக அரசு அவரின் நிர்வாகத்திறனை தமிழகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிட்டுவிட்டது.

இந்நிலையில் தனக்கு கொடுத்த பணியை கிடைத்த நேரத்தில் சிறப்பாக செய்து அரசை ஆட்டம் காண வைத்தவரின் திறமையையும், நேர்மையையும் பாராட்டி டெல்லியை சார்ந்த நிறுவனம் விருது கொடுத்து கௌரவித்துள்ளது அவரை மேலும் தட்டி கொடுப்பதாக அமைந்துள்ளது. மேலும், அவரின் பொறுப்பையும், சமூக கடமையையும் அதிகப்படுத்தியுள்ளது.

சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களை எப்படியாவது அரசியலுக்கு வரவைத்துவிட வேண்டும் என்று தமிழக இளைஞர்கள் முயற்சித்து வரும் வேளையில் அவருக்கு கிடைத்துள்ள இந்த விருதை அவர் கொண்டாடுகின்றாரோ இல்லையோ இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தன்னை அரசியலுக்கு அழைத்த இளைஞர்களை வைத்து சமூக சேவை செய்துவரும் சகாயம், இளைஞர்களின் விருப்பப்படி அரசியலுக்கும், அதிகாரத்துக்கும் வந்து மக்களுக்கு சகாயம் செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.