Take a fresh look at your lifestyle.

`பணம் அனுப்பியிருக்கிறேன்; 7 மாவட்ட மக்களுக்கு உதவுங்கள்!’

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களுக்கு உதவும் வகையில், அங்குள்ள விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குப் பணம் அனுப்பியுள்ளார், நடிகர் விஜய்.

வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ‘கஜா’ புயலாக மாறி, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர், தஞ்சை மாவட்டப் பகுதிகளில் கரையைக் கடந்தது.

கஜா புயல் கரையை கடந்தபோது கனமழை பெய்ததாலும், சூறைக்காற்று பலமாக வீசியதாலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், தமிழக அரசும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், பல தன்னார்வ அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளையும், நிவாரணப் பொருள்களையும் மக்களுக்கு வழங்கிவரும் நிலையில், இன்று காலை திடீரென நடிகர் விஜய்யிடம் இருந்து புயல் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் இயக்கத் தலைவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாகை தெற்கு மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் சுகுமாரிடம் கேட்டபோது, “கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதைச் சீர்செய்யும் வகையில், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இன்று காலை விஜய் தொடர்பு கொண்டு, ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணப் பொருள்கள் மெழுகுவத்தி, பால், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பிவைக்கப்படும்.

அதை மக்களுக்குக் கொடுத்து உதவுங்கள் என்று தெரிவித்தார்” என்று கூறினார்.

கடலூர் மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் சீனுவிடம் பேசியபோது, “இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், என் வங்கிக் கணக்கில் ரூ.4.50 லட்சம் பணம் வந்திருந்தது.

யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று பார்த்தோம். அது சென்னையிலிருந்து விஜய் என்ற பெயரில் தளபதியிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பணம்.

மக்கள் இயக்கம் தலைமைக்குத் தொடர்புகொண்டு கேட்டபோது, நாகை மாவட்ட புயல் நிவாரண நிதிக்காக அனுப்பிவைக்கப்பட்ட பணம். அதை மக்களுக்கு உதவுகின்ற வகையில் செலவு செய்யுமாறு விஜய் அனுப்பிவைத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுபோல, மதுரை மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் தங்க பாண்டியனின் வங்கிக் கணக்கிலும் 2 லட்சம் அனுப்பப்பட்டிருக்கிறது.

விஜய் அனுப்பிவைத்திருக்கும் பணத்தை குடிசை வீடுகளை இழந்த மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து, மீதமுள்ள பணத்தை பல்வேறு பொருள்களாக மக்கள் பயனடையச் செய்வோம்” என்று கூறினார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More